Call Us   Enquire Now
துறைகள்

கல்வித்துறை

பாடசாலை கீதம்

அகரம் முதலாய் திகழும் தமிழினை
அருங்கலை அமுதாய் அகத்தினில் விதைக்கும்
அஸ்கரோ பாரும் தமிழறிவாலயம்
அகிலம் போற்றிட வாழியவே

(அகரம்)

இளையவர் நாவினிலே இன்பத்தமிழ் துலங்கிடவே
இரவிலும் சூரியன் உலவிடும் நாட்டினிலே
எண்ணமதில் நிறைவோடு இயங்கிடும் அறிவாலயம்
ஏற்றமுடன் புகழ் தழுவி வாழியவே வாழியவே

(அஸ்கரோ பாரும்)

கலைவளர் நிலமாக கருத்தினில் உயர்ந்திடவே
கற்றிடும் மாணவர்கள் நன்னெறியில் சிறந்திடவே
புலம்பெயர் தமிழினத்தின் உறவாகும் அறிவாலயம்
புத்துணர்வோடு நித்தம் வாழியவே வாழியவே.

(அஸ்கரோ பாரும்)

இயற்றியவர் : திரு.கார்மேகம் நந்தா
இசையமைத்துப்பாடியவர் : திருமதி. அருந்ததி சிறீரங்கன்

 

வரலாறு

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து உலகம் முழுவதும் வாழவேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்பட்ட தமிழர்களின் ஒரு சிறு பகுதியினர் நோர்வேயின் அஸ்கர்,பாரும் பகுதியிலும் 1980 இன் ஆரம்பங்களில் குடியேறி வாழத்தலைப்பட்டனர்.1990 அளவில் இத்தொகை 30-40 அளவினை எட்டியபோது எமக்கான சமூக தேவைகளை நிறைவு செய்யவும் புரிந்துணர்வுடன் செயற்படவும் எமது மத்தியில் தமிழர்களுக்கான ஒரு அமைப்பின் தேவை உணரப்பட்டு 1993 ஆனி 17 இல் 27 பேரின் பங்களிப்புடன் அஸ்கர் பாரும் தமிழர் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.பாரும் நகரசபை மண்டபத்தில் இதற்கான முதலாவது கூட்டம் கூட்டப்பட்டு ஒன்றியத்திற்கான நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.

ஓன்றியத்தின் தலைவராக க.விஸ்ணுசிங்கமும் செயலாளராக க .தவேந்திரனும் பொருளாளராக புஸ்பேந்திராவும் உபதலைவராக சோ.ஸ்கந்தமணியும் உபசெயலாளராக ஆர்.கணேஸ்ம் விளையாட்டுப்பொறுப்பாளராக சுந்தரலிங்கமும் உப விளையாட்டுப் பொறுப்பாளராக பாஸ்கரனும் கலைப்பொறுப்பாளராக றகுணாவும் உப கலைப்பொறுப்பாளராக தங்கவேலும் தெரிவு செய்யப்பட்டு முதலாவது நிர்வாகசபை அமைக்கப்பட்டது.

1990களின் மத்தியிலிருந்து அஸ்கர் - பாறும் பகுதிகளில் வாழும் சிறார்களின் எண்ணிக்கையானது படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்தது. இப்பகுதிகளில் வாழும் பிள்ளைகள் தமிழ், கலைப் பாடங்களைக் கற்பதற்காக வேறிடங்களுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியது. இந்நிலைமையானது, அவர்களுக்கெனத் தமிழ்ப் பாடசாலை ஒன்றினை உள்ளுரிலேயே ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை உருவாக்கியது. இதனைக் கருத்திற் கொண்ட ஒன்றியமானது, 1997ஆம் ஆண்டு அஸ்கர் - பாறும் தமிழ் அறிவாலயம் எனும் பெயரில் இத்தமிழ்ப்பாடசாலையானது, வொய்யனென்கா பாடசாலையில் (Vøyennega Skole) ஆரம்பிக்கப்பட்டது.

சங்கீத வித்வான் திருமதி வாசுகி ஐயபாலன் அவர்களை அதிபராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுடன் வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், சுரத்தட்டு, மிருதங்கம், ட்றம்ஸ் முதலான நுண்கலைகளும் கற்பிக்கப்பட்டு வருகின்றன. பத்து மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையானது, விரைவிலேயே ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கவிஞர் கார்மேகம் நந்தாவின் இப்பாடசாலைக்கான கீதத்தை, ஈழத்தின் பிரபல இசைக்கலைஞர் கலாசூரி திருமதி அருந்ததி சிறீரங்கநாதன் அவர்கள் இசையமைத்துப் பாடியிருந்தார்.

ஆசிரியர்களின் தரத்தையும், ஆளுமையையும் உயர்த்துவதற்காகப் பல கருத்தரங்கங்களும், பயிற்சிப் பட்டறைகளும் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன. கல்விக்குழுவும், ஆசிரியர்களும் இணைந்து புலம்பெயர் சூழலில் வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தகுந்தவாறான பாடத்திட்டங்களை உருவாக்கி வருகின்றமை சிறப்பித்துக் குறிப்பிடற்பாலது.

அறிவாலயத்தில் பயிலும் முதலாம், இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் 2005ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ் அறிவோம் எனும் இப்பாடப் புத்தகங்கள் திருமதி சர்வா பாஸ்கரன் B.A., திருமதி கேமாவதி கபிலதாஸ், செல்விகள் மு. சிந்து, ஜானகி தர்மலிங்கம், திருவாளர்கள் .S உதயன் M.A ,, சட்டவாளர் Dr. க.சிவபாதம், கவிஞர் த. துரைசிங்கம், S நிரோஜனன், இ. பத்மநாதன், க. சுந்தரலிங்கம் ஆகியோரின் முயற்சியால் உருவாக்கப்பட்டிருந்தன.